உதவியாளர் உதவியால் நல்ல நடிகராவேன்: சொல்வது எஸ்.ஜே.சூர்யா

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ‘ வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதள தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் எஸ். ஜே. சூர்யா பேசியதாவது:

இந்தத் தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் என்னுடைய உதவியாளர். அவரது இயக்கத்தில் முதன் முதலாக வலைதள தொடரில் நடிப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இவர் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் என்னிடம் ஒரு கதையை சொன்னார். அப்போது அவரிடம்,’ நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனால் வலுவான கதையை எழுதி வா’ என்றேன். இந்த முறை அவர் நல்ல கதையுடன் வந்தார். திரில்லர் என்றாலே அதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்கும். இதில் உணர்வுபூர்வமான கதைகளும் உண்டு. இது பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும்.

தயாரிப்பாளர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் தெளிவான திட்டமிடல், ப்ரைம் வீடியோவின் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிசின் கடின உழைப்பு இவையெல்லாம் எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள். அதாவது என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் தயாராகி அமேசான் பிரைம் வீடியோ எனும் சர்வதேச அளவிலான புகழ்பெற்ற டிஜிட்டல் தளத்துடன் இணைந்து முதன் முதலாக வலைதள தொடரில் நடித்திருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.

திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும். அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். ‘உண்மை நடக்கும். பொய் பறக்கும்’ என இந்த தொடரில் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கிறது கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் இயல்பாக பேசும் இந்த பேச்சு, இந்த தொடருக்கு பொருத்தமானது. டேக் லைனாக இணைத்துக் கொள்ளலாம். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.