அசாத்தியமான கேட்ச்… சூப்பர் மேனாக மாறிய தல தோனி:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் பந்தாடிய அதே துடிப்புடன் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. கடைசிவரை வெற்றி முகத்தில் இருந்த சென்னை அணி, டெத் ஓவர்களில் சொதப்பியதால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது.

சென்னை அணி பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசி கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். ராகுல் திரிபாதி மட்டும் தனியாளாகப் போராடி அணியின் ஸ்கோரை 167ஆக உயர்த்தினார்.

பந்துவீச்சில் அதிரடி காட்டிய சென்னை அணி, பீல்டிங்கிலும் சிறப்பாக சோபித்தது. 11ஆவது ஓவரில், சுனில் நரைன் தூக்கி அடித்த பந்து மிட் விக்கெட் திசையில் பறந்து சென்றது. அதனை, சீறிப்பாய்ந்து பிடித்த ஜடேஜா பவுண்டரி லைனை உரசும் அளவிற்குச் சென்றார். உடனே சுதாரித்துக்கொண்ட அவர், அருகில் நின்றுகொண்டிருந்த ஃபாஃப் டூ பிளஸியிடம் பந்தைத் தூக்கிப்போட்டார். இதனால், நரைன் அவுட் ஆனார்.

39 வயதாகும் மகேந்திரசிங் தோனியும், சூப்பர் மேனாக மாறி கேட்ச் ஒன்றைப் பாய்ந்து பிடித்தார். 19.5 ஓவரில் டுவைன் பிராவோ, ஷிவம் மாவிக்கு ஆஃப் திசையில் பந்து வீசினார். தூக்கி அடிக்க முற்பட்ட போது, பந்து பேட்டில் உரசி தோனிக்கு வலது பக்கம் சென்றது. இதனைக் கண்ட தோனி, பாய்ந்து சென்று அற்புதமான முறையில் கேட்ச் பிடித்து அசத்தினார்.

தற்போது, தோனியின் இந்த அற்புதமான கேட்ச் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சென்னை அணி பௌலிங் பீல்டிங்கில் சிறப்பாக சோபித்தாலும், பேட்டிங்கில் கோட்டைவிட்டது. ஷேன் வாட்சனை தவிர மற்ற அனைவரும் அதிரடியாக விளையாடி ரன்களைகுவிக்க தவறிய காரணத்தால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டும் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Leave A Reply

Your email address will not be published.