சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் பேட்டி

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். போலீசார் அனுமதி அளித்த நேரத்தை விட கூடுதல் நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், அந்த கூட்டத்தில் சட்டத்துக்கு புறம்பான வகையில் பேசியதாகவும் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது சீமான் கோர்ட்டில் ஆஜரானார். இதன்பின்பு, வழக்கு விசாரணை ஜனவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் ரஜினியின் திரைப்படங்களை யாரும் குறை சொல்வதில்லை. அரசியலில் தமிழர்களுக்கு ஒரு கோட்பாடு உண்டு. வரலாற்றில் அடிபட்டு வீழ்ந்த இனம் மீண்டு எழும்போது எங்கிருந்தோ வந்தவன் வழி நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிலமே எங்கள் உரிமை என்று ரஜினி திரைப்படத்தில் சொன்னதையே நாங்களும் சொல்கிறோம்.

கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் எம்.ஜி.ஆரை பற்றி பேசி, அ.தி.மு.க.வின் வாக்கு சேகரிப்பாளர்களாக உள்ளனர். ரஜினி, கமல் ஆகியோருக்கு ஈழம் பற்றிய நிலைப்பாடு என்ன?.

ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு பாடம் புகட்டுவதன் மூலம் எந்த நடிகரும் இனி அரசியலுக்கு வரக்கூடாது. நடித்தால் மட்டும் நாடாளும் தகுதி வந்துவிடும் என்கிற எண்ணம் மாற வேண்டும். நான் சினிமாவில் இருந்து வந்தவன் என்றாலும் ரசிகர்களை சந்திக்கவில்லை, மக்களை சந்தித்தேன்.

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.