காட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பும் நடிகர் தேஜ்

தமிழில் கேடி குஞ்சுமோன் தயாரித்த காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ்.. அதை தொடர்ந்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காந்தம் ஆகிய படங்களில் நடித்தார்.. இயக்குநர், தயாரிப்பளர் என பன்முகம் கொண்ட இவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்கிற படத்தை தமிழ் மற்றும் கன்னடம் என, இருமொழி படமாக தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் ஏப்-16ஆம் தேதி ரிலீஸாகிறது. அதுமட்டுமல்ல சுமார் நாற்பது கோடி பட்ஜெட்டில் இந்தியா முழுமைக்குமான படம் ஒன்றையும் இயக்கவுள்ளார் தேஜ்.

இதுபற்றி தேஜ் கூறும்போது, “காதலுக்கு மரணம் இல்லை, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படங்களில் நடித்தேன். காந்தம் என்கிற படத்தையும் ரிலீஸ் செய்தேன். இந்த நான்கு வருட இடைவெளியில் ‘தமிழ் மற்றும் கன்னடத்தில் ரீவைண்ட்’ என்கிற பெயரில் இருமொழி படம் ஒன்றை தயாரித்துள்ளேன் கர்நாடகாவில் ஏப்ரல் 16ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது தமிழில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இந்த டைட்டிலை தான், சிம்பு நடித்துவரும் மாநாடு படத்தின் கன்னட ரீமேக்கிற்கு டைட்டிலாக அறிவித்தார்கள். ஆனால் அதே டைட்டிலை, நான் ஏற்கனவே பதிவு செய்து, சென்சார் சான்றிதழ் வாங்கி, ரிலீஸ் வரை வந்துவிட்டேன் என்கிற தகவல், தெரிந்ததும் விட்டுக்கொடுத்து விலகி விட்டார்கள். ஒரு பத்திரிக்கை நிருபர், கார்ப்பரேட் மாஃபியா ஒன்றை எதிர்த்து டெக்னாலஜி உதவியுடன் போராடுகிறார். இது மனிதனின் மூளை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான அம்சத்தை மையமாக கொண்ட சயின்டிஃபிக் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

தற்போது 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தியா முழுமைக்குமான படம் (Pan India Movie) ஒன்றை நடித்து இயக்கவுள்ளேன். படத்தின் பெயர் காட் (GOD).. அதாவது ‘குளோரி ஆஃப் டான்’ என்பதன் சுருக்கம் தான் அது.

கன்னடத்தில் கே.ஜி.எஃப் படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தியா முழுமைக்குமான படம் (Pan India Movie) என்பது ஒரு புதிய ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. அதுமட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் செட்டாக கூடிய கதையும் டைட்டிலும் எங்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பில்லா படத்தை தாண்டிய ஒரு படமாக, அதாவது 2021ல் பில்லா போன்ற ஒரு டான் இருந்தால் அவன் எப்படி இருப்பான் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது

இந்த படத்தின் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக ஹாலிவுட் கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம் தற்போது கன்னடத்தில் ராமாச்சாரி 2.O என்கிற படத்தில் நடித்து வருகிறேன். அதை முடித்துவிட்டு, விரைவில் இந்த படத்தை துவங்க உள்ளேன்” என்கிறார் தேஜ்..

Leave A Reply

Your email address will not be published.