பெண்குயின் விமர்சனம்

தன் கணவர் ரகுவுடன் சந்தோஷமாக இருக்கும் ரிதம்(கீர்த்தி சுரேஷ்) மகன் அஜய் தான் உலகம் என்று இருக்கிறார். அந்த குழந்தைக்கு பெண்குயின் கதை சொல்லி தூங்க வைக்கிறாள். தோழியின் தந்தை இறந்தபோது அங்கு குடும்பத்துடன் செல்கிறார் ரிதம்.

அப்பொழுது சில நிமிடங்கள் குழந்தையை காணாமல் ரிதம் துடிக்கிறார். சில நாட்கள் கழித்து சார்லி சாப்லின் வேடம் அணிந்த ஒருவர் ரிதமின் மகன் அஜய்யை கடத்துகிறார். குழந்தை தொலைந்து போனதால் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்படுகிறது. ரிதம் எப்பொழுது பார்த்தாலும் அஜய் நினைவாகவே சோகமாக இருக்கிறார். இதனால் ரிதம், ரகு பிரிகிறார்கள்.

ரிதம் அஜய்யை ஆறு ஆண்டுகளாக தேடுகிறார். ஒரு கட்டத்தில் அஜய்யின் உடை கிடைக்கவே அவர் இறந்துவிட்டதாக போலீசார் கூறுகிறார்கள். ஆனால் என் மகன் சாகவில்லை, உயிருடன் தான் இருக்கிறான் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ரிதம். அவர் ஆண்டுக்கணக்கில் குழந்தையை தேடுவதை பார்த்த கவுதம் என்பவருக்கு ரிதமின் குணம் பிடித்துப் போய் திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணத்திற்கு பிறகு ரிதம் கர்ப்பமாக இருக்கிறார். குழந்தையை தொலைத்த சோகத்திலேயே மீண்டும் தாயாக தயாராகுகிறார் ரிதம். இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து குழந்தை அஜய் கிடைத்தாலும் அங்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அஜய்யை கடத்தியது யார், ஏன் கடத்தினார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறார் ரிதம்.

இதற்கிடையே குழந்தைகள் கடத்தல் தொடர்கிறது. அஜய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழந்தைகளை கடத்தி உறுப்புகளை எடுத்துவிட்டு கொடூரமாக கொலை செய்கிறார். இதை ரிதம் கண்டுபிடிக்க அவர் தான் அஜய்யை கடத்தினார் என்று நினைக்கிறார். ஆனால் டாக்டரிடம் விசாரித்தபோது தான் வேறு ஒரு உண்மை தெரிய வருகிறது.

அது என்ன உண்மை, அஜய்யை கடத்தியது யார், ஏன் என்பதை சஸ்பென்ஸ் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்.

கீர்த்தி சுரேஷுக்கு சீரியஸான தாய் கதாபாத்திரம் மிகவும் பொருந்தியுள்ளது. படம் முழுக்க கீர்த்தி தான் இருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார் கீர்த்தி. படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை பெரிய பலம்.

படம் துவங்கியபோது விறுவிறுப்பாக சென்றது. ஆனால் போகப் போக பார்வையாளர்களின் பொறுமையை மிகவும் சோதித்துவிட்டது. படத்தின் நீளம் அதிகம். அதை குறைத்திருந்தால் பெண்குயின் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கும். முதல் படத்திலேயே ஈஸ்வர் கார்த்திக் வித்தியாசமான கதையை எடுத்து அதை அழகாக காட்சிபடுத்தியிருக்கிறார். மைனஸ்கள் இருந்தாலும் ஈஸ்வரின் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.

ஈஸ்வர் கார்த்திக் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அடுத்து என்ன, அடுத்து என்ன என்பதை சுவாரஸ்யமாக காட்ட முயன்றிருக்கிறார். ஆனால் படத்தின் நீளம் அதை கெடுத்துவிட்டது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யோசிக்க வேண்டிய நேரத்தில் பார்வையாளர்களோ எப்பொழுது படம் முடியும் என்று யோசிக்க வைத்துவிட்டது.

சுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டிய படத்தை நீளம், தேவையில்லாத பில்ட்அப், வீக்கான திரைக்கதை கெடுத்துவிட்டது. ஆக, பெண்குயின் மனதை கவரவில்லை.

Leave A Reply

Your email address will not be published.